போலீசாரை மிரட்டிய ரவுடி கைது
|மாகி பிரந்தியத்தில் போலீசாரை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
மாகி
மாகி பிரந்தியத்தில் போலீசாரை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
போலீசாருக்கு மிரட்டல்
புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் பள்ளூர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அபிலாஷ் மல்லாயி. இவர் கடந்த 31-ந்தேதி இரவு பணியில் இருந்துள்ளார்.
அப்போது காவல்நிலைய போன் ஒலிக்கவே போனை எடுத்து பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய மர்ம நபர் பொய் வழக்கு போட்டால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் கை, காலை வெட்டுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் மீண்டும் சிறிதுநேரம் கழித்தும் போனில் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதை போலீஸ்காரர் அபிலாஷ் மல்லாயி பதிவு செய்து வைத்துள்ளார்.
ரவுடி கைது
இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவர் யார்? என்பதை கண்டறிந்தனர்.
அவர் பள்ளூரை சேர்ந்த அமராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. ரவுடியான அவர் மீது 7 வழக்குகள் உள்ளன. அவரது நண்பர்களான விஷ்ணு, அதுல் ஆகியோரை அடிதடி வழக்கில் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, ஆத்திரத்தில் அவர் போலீசாரை போன் மூலம் மிரட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அமராஜை போலீசார் கைது செய்தனர்.