சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
|ரெயின்போ நகரில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
ரெயின்போ நகரில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அமைக்கும் பணி
புதுவை ரெயின்போ நகரில் 4 மற்றும் 7-வது குறுக்கு தெருவில் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் 12-வது குறுக்கு தெருவில் சாலை மற்றும் வாய்க்கால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அந்த பணிகளையும் இப்போதே செய்ய வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வான ஜான்குமார் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் பணிகள் நடக்கவில்லை.
பணிகள் நிறுத்தம்
இந்தநிலையில் 4 மற்றும் 7-வது குறுக்கு தெருவில் இன்று ஊழியர்கள் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் காங்கிரஸ் பிரமுகரான வினோத் தலைமையில் வந்து 12-வது குறுக்கு தெருவில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை முடித்துவிட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சாலை போடும் பணியை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் உழவர்கரை நகராட்சி இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சாலை போடும் பணியை செய்யலாம் என்றும், வாய்க்கால் அமைக்கும் பணியை பிறகு மேற்கொள்வதாகவும் உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின்னர் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடந்தது.