முதன்மை கல்வி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை
|ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
காரைக்கால்
ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்கக்கோரி முதன்மை கல்வி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
காரைக்கால் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பாமல் தகுதிவாய்ந்தோரை கொண்டு நிரப்பவேண்டும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து பிரிவினருக்குமான நிலுவை கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை உடனே மேம்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு தரமான காலை, மதிய உணவுகளை வழங்கவேண்டும். இலவச பஸ்களை அதிகரிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் பசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகை போராட்டம்
பாரதியார் சாலை நடுவே இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென முதன்மை கல்வி அலுவலக கேட்டை திறந்து உள்ளே சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அனைவரையும் வெளியே போகும்படி போலீசார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து காங்கிரசார் அங்கிருந்து ஊர்வலமாக நேரு நகர் வரை சென்றனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.