வீட்டை எழுதிக்கேட்டு தாக்கியதால் தாய் தற்கொலை முயற்சி
|வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருநள்ளாறு
வீட்டை எழுதித்தர கேட்டு மகன் அடித்து தொந்தரவு கொடுத்ததால் தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வீட்டை எழுதிக்கேட்டு தொந்தரவு
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பூமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 65). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் மகன் வடிவேலுவுடன் (30) தனலட்சுமி வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு வடிவேலுக்கு திருமணம் ஆனது. தொடர்ந்து, அதே வீட்டில் மனைவியுடன் அவர் வசித்து வருகிறார். அடிக்கடி வீட்டை தன் பெயரில் எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு போகும்படி, தாயிடம் வடிவேலு கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அடித்து உதைத்தார்
இது தொடர்பான வழக்கு, காரைக்கால் சார்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வடிவேலு அடிக்கடி தாயை மிரட்டி வந்ததால், அவர் அருகில் உள்ள மகள் சங்கீதா வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில், கடந்த 11-ந்தேதி தாயும், மகனும் ஒரே வீட்டில் சண்டையில்லாமல் வசிக்குமாறு சார்பு கோர்ட்டு அறிவுறுத்தி அனுப்பியது.
அதன்பேரில் தனலட்சுமி நேற்று தனது வீட்டுக்கு சென்றபோது, மகன் வடிவேலு அவரை அவதூறாக பேசி, எதற்காக இங்கு வந்தாய்..? என கேட்டு அடித்து உதைத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
போலீசார் தேடுகிறார்கள்
இதில், அவமானம் அடைந்த தனலட்சுமி, வீட்டில் இருந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரையை மொத்தமாக விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி அறிந்ததும் அவர், தேனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வடிவேலு மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.