
குண்டு வெடிப்பு சத்தத்தால் நீதிபதிகள் அதிர்ச்சி

புதுவை கோர்ட்டு அருகே குண்டு வெடிப்பு சத்தத்தால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி
புதுவை கோர்ட்டு அருகே குண்டு வெடிப்பு சத்தத்தால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
முத்தரப்பு கூட்டம்
தமிழ்நாடு சமரச மையம் மற்றும் புதுவை மாவட்ட சமரச மையம் சார்பில் முத்தரப்பு கூட்டம் புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கருத்தரங்க கூடத்தில் நடந்தது. மாவட்ட சமரச மைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா வரவேற்று பேசினார். புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், தமிழ்நாடு சமரச மைய முதுநிலை பயிற்சியாளர் ஷீலா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது. முடிவில் மாவட்ட சட்டசேவை ஆணைய செயலாளர் ஜெயசுதா நன்றி கூறினார்.
குண்டுவெடிப்பு
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, கோர்ட்டு அருகே உள்ள சுதேசி மில் வளாகத்தில் இருந்து திடீரென குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகளும், வக்கீல்களும் வெளியே எட்டிபார்த்தனர். அப்போது அங்கு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிலர் அங்கிருந்து வெளியேற தொடங்கினார்கள். மேலும் ஜன்னல் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
சினிமா படப்பிடிப்பு
இதுதொடர்பாக விசாரித்தபோதுதான், சுதேசி மில் வளாகத்தில் பாபி சிம்கா நடித்த சினிமா படப்பிடிப்பு நடப்பது தெரியவந்தது. பட சூட்டிங்கில், கார் ஒன்றை குண்டு வைத்து தகர்த்ததால் டமார் என்ற வெடிச்சத்தத்துடன் கார் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதியடைந்தனர்.