< Back
புதுச்சேரி
பா.ஜ.க.வை வீழ்த்த விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்
புதுச்சேரி

பா.ஜ.க.வை வீழ்த்த விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்

தினத்தந்தி
|
2 Oct 2023 10:46 PM IST

பா.ஜ.க.வை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.

புதுச்சேரி

பா.ஜ.க.வை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி கட்சியினர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என்று டி.ராஜா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா புதுச்சேரி வந்தார். கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடிக்கு சாதகம் இல்லை

மணிப்பூரில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை அங்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடவில்லை. பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் வன்முறை நடந்த மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? ஆக்கப்பூர்வமாக அமைதி நிலவ அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணிப்பூரில் பா.ஜ.க. அரசு தான் உள்ளது. பா.ஜ.க.வின் தவறான கொள்கையால் தான் மணிப்பூர் கலவரம் ஏற்பட்டது.

விரைவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மோடி பிரதமராக பொறுப்பேற்று 9½ ஆண்டுகள் ஆகிறது. 3-வது முறையாக பிரதமராவேன் என மார்த்தட்டிக் கொள்கிறார். ஆனால் அவருக்கு கள நிலைமை சாதகமாக இல்லை. மாற்று அரசை மக்கள் விரும்புகின்றனர்.

இதனால் பயந்து போய் நிதானம் இழந்து பேசி வருகின்றனர். இந்தியா மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இல்லை. ஆனால் அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகளை பறித்து வருவதுடன், தேசிய கல்வி கொள்கையையும் திணிக்கிறது.

குழப்பம் வராது

தேர்தலை நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்தியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 கட்சிகள் இணைந்துள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்கள் அந்தந்த மாநில கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்குவார்கள். பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை திரட்ட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படவேண்டும்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க. வீழ்ச்சி அடையும்போது பிரதமர் யார்? என்பதை தேர்ந்தெடுப்போம். இதில் எந்த குழப்பமும் இந்தியா கூட்டணியில் வராது. கூட்டான முடிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், கட்சியின் துணைச்செயலாளர் சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்