டீசல் ஊற்றி மீனவர் தீக்குளிப்பு
|தவளக்குப்பம் அருகே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த மீனவர் டீசல் ஊற்றி தீக்குளித்தார். அலறியடித்து ஓடியபோது குடிசை வீடும் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அருகே 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த மீனவர் டீசல் ஊற்றி தீக்குளித்தார். அலறியடித்து ஓடியபோது குடிசை வீடும் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர் தீக்குளிப்பு
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் வல்லத்தான் (வயது 35). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து வல்லத்தான், வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரும் கணவருடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து சென்றதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வல்லத்தான் நேற்று குடிபோதையில் தனது உடலில் டீசல் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
தீவிர சிகிச்சை
உடலில் தீ பரவியதால் வல்லத்தான் வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த குடிசை வீட்டுக்குள் சென்று தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றார். அந்த சமயத்தில் குடிசை வீட்டிலும் தீ பற்றிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சேரி தீயணைப்புத்துறையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் அவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.