தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு 90 வீரர்கள் ஏலம்
|தவளக்குப்பத்தில் ஐ.பி.எல். போன்று பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு 90 வீரர்கள் ஏலம் எடுத்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பத்தை சுற்றியுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐ.பி.எல். போல தவளக்குப்பம் பிரீமியர் லீக் (டி.பி.எல்.) போட்டி நடத்த வீரர்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் நடந்தது. தவளக்குப்பத்தை மையப் பகுதியாக கொண்டு அதனை சுற்றியுள்ள கிராமங்களான பூரணாங்குப்பம், தானம்பாளையம், பிள்ளையார் திட்டு, பெரிய காட்டுப்பாளையம், ஆண்டியார்பாளையம், இடையார்பாளையம், அரியாங்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 90 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
6 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு வீரர்களை திறமைகளை கொண்டு அதன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதிகப் பட்சம் தொகையில் தவளக்குப்பத்தைச் சேர்ந்த ரகுவரன் ரூ.2,600-க்கும், தானம்பாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு, ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராகுல்ராஜ் ஆகியோர் தலா ரூ.2,400-க்கும், அரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்த், தவளக்குப்பத்தை சேர்ந்த கோபால் ஆகியோர் தலா ரூ.2,200-க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் வியாபாரிகள், தொழிலதிபர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
இந்த போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.