தடுப்புக்கட்டை அமைக்கும் பணி நிறுத்தம்
|புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புக்கட்டை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையின் குறுக்கே ஆங்காங்கே வாகனங்கள் செல்ல வசதியாக தடுப்புக்கட்டைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டிருந்தது. அதன் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன.
இந்த இடைவெளிகளை மூடவேண்டும் என்று சட்டசபையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவை வந்த தமிழக அரசு பஸ்சை, சாலையை கடந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புக்கட்டையில் ஏறி நின்றது.
இதைத்தொடர்ந்து அந்த இடைவெளியை தடுப்பு சுவர் எழுப்பி மூட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வைத்தியநாதன் எம்.எல்.ஏ.வுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரும் அங்கு வந்த நிலையில் பணிகள் தொடங்கியதும் அவரும் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் பணிகளும் நிறுத்தப்பட்டன. இருந்தபோதிலும் தடுப்பு சுவர் எழுப்புவதற்கு பதிலாக அங்கு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அந்த வழியாக சாலையை கடப்பது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
----