பத்திரப்பதிவு அதிகாரி போலீசில் சரண்
|கோவில் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரி ரமேஷ் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்று மாலை சரண் அடைந்தார்.
புதுச்சேரி
கோவில் நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரி ரமேஷ் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்று மாலை சரண் அடைந்தார்.
கோவில் நிலம் அபகரிப்பு
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார் பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி (அப்போதை செட்டில்மெண்ட் அதிகாரி) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்
பணியிடை நீக்கம்
துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசில் சரண்
இதற்கிடையே ரமேஷ் இன்று மாலை 4 மணியிளவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.