புதுப்பொலிவு பெறும் சுண்ணாம்பாறு பழைய பாலம்
|புதுவைக்கு ஜனாதிபதி வருகையால் சுண்ணாம்பாறு பழைய பாலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
அரியாங்குப்பம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2- நாள் அரசு முறை பயணமாக 7-ந் தேதி புதுச்சேரி வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை முன்னிட்டு ஜனாதிபதி முர்முவுக்கான சுற்றுப்பயண பாதையில் உள்ள புதுவை நகர சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் இருந்த வேகத்தடைகளும் அகற்றப்பட்டுள்ளன. சாலையோரம் நீண்டிருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.
மேலும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர்களில் கருப்பு, வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பாற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டு பழமைவாய்ந்த பாலத்தில் வர்ணம் பூசும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட பல ஆண்டுகளுக்கு பிறகு சுண்ணாம்பாறு பழைய பாலம் புதுப்பொலிவு பெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.