விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
|திருக்கனூர் அருகே கோர்ட்டில் போடப்பட்ட வழக்கின் இறுதி முடிவு எட்டப்படாத விரக்தியில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே வம்புபட்டு அரசு மரத்துவீதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 64). விவசாயி. அவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களது மகன் சரவணாவேல். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தற்போது புதுவை பிருந்தாவனம் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலஉச்சவரம்பு சட்டத்தை எதிர்த்து, சிவலிங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அடிக்கடி சிவலிங்கம் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். ஆனால் இந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்படாமல் இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று மாலை சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி விட்டு வம்புபட்டு வந்தார். அங்குள்ள ஏரி அருகே ஒரு சிறிய பாலத்தில் சிவலிங்கம் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.