வீட்டில் திடீர் தீ; அக்காள்-தங்கை உயிர் தப்பினர்
|தவளக்குப்பத்தில் வீட்டில் பற்றி எரிந்த தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக அக்காள்-தங்கை உயிர் தப்பினர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பத்தில் வீட்டில் பற்றி எரிந்த தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக அக்காள்-தங்கை உயிர் தப்பினர்.
வீட்டில் தீ
தவளக்குப்பம் ராமதாஸ் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அவரது மனைவி பிரேமலதா. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரஜனா (வயது 9), ஹீரா (4) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இன்று மாலை பன்னீர்செல்வம் வெளியில் சென்றிருந்தார். பிரேமலதா வேலைக்கு சென்று விட்டார். இதனால் அக்காள்-தங்கை 2 பேரும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மின்கசிவு காரணமாக பெடஸ்டல் பேனில் இருந்து தீப்பொறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த மேஜையில் தீப்பிடித்தது.
அக்காள்-தங்கை உயிர் தப்பினர்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் 2 பேரும் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் வீடு முழுக்க தீ பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுச்சேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்துதண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்குள் வீட்டில் இருந்த விலையுயர்ந்த டி.வி., நாற்காலி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் அக்காள்-தங்கை 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.