அரசு ஊழியரிடம் சப்-இன்ஸ்பெக்டர் மோசடி
|இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி புதுவை அரசு ஊழியரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோசடி செய்ததாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி புதுவை அரசு ஊழியரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோசடி செய்ததாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை ஊழியர்
புதுவை நெல்லித்தோப்பு நகராட்சி அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 54). பொதுப்பணித்துறை ஊழியர். இவர் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட நபர் பணத்தை திருப்பி தரவில்லை.
இதுதொடர்பாக பாலாஜி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை சந்தித்து கூறியுள்ளார். அவரும் பணத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இரிடியம் வியாபாரம்
மேலும் கடந்த மார்ச் மாதம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், இரிடியம் வியாபாரம் செய்யும் கும்பலுடன் தனக்கு பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் வியாபாரம் முடிந்து பெரும் தொகைக்காக காத்திருப்பதாகவும் மாத இறுதியில் பெரிய தொகை கிடைக்க உள்ளதாகவும் கூறினார். சென்னையில் உள்ளவர்களுக்கு கொடுத்து ஏமாந்ததுபோல் இல்லாமல் தன் மூலம் கொடுத்தால் உறுதியாக கிடைக்கும் என்றும் கூறினார்.
அதற்காக ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் கேட்டபடி பாலாஜியும் ரூ.30 ஆயிரத்தை கொடுத்தாராம். மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன்கார்டு நகல்களையும் கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் சென்னை செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
டி.ஜி.பி.யிடம் புகார்
ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சென்னைக்கு செல்ல வரவில்லையாம். மேலும் பாலாஜியின் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, தனது நண்பர்கள் மூலம் சென்னை பண விவகாரத்தை தானே கவனித்துகொள்வதாகவும், ரூ.30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்க சொல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகும் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீஸ் டி.ஜி.பி.க்கு புகார் கொடுத்துள்ளார்.