ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
|காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை திருமண விழாவில் விருந்தினர்களை வரவேற்பது போல், பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
காரைக்கால்
காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை திருமண விழாவில் விருந்தினர்களை வரவேற்பது போல், பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பது 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இன்று 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முந்தைய நாளே பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, மாணவர்களை வகுப்பறைக்கு வரவேற்க, பள்ளி நிர்வாகம் தயாரானது.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் நாளில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். முதல் நாள் என்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்ததை காணமுடிந்தது.
பன்னீர் தெளித்து வரவேற்பு
திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துணை முதல்வர் அசோகன், உடற்கல்வி ஆசிரியர் கருப்புசாமி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நுழைவு வாயிலில் நின்றபடி திருமண விழாவை போல் மேஜையில் பன்னீர், சந்தனம், குங்குமம், பூ, சாக்லெட்களை வைத்து, மாணவிகளை வரவேற்றனர்.
பள்ளிக்கு வந்த மாணவிகளை பன்னீர் தெளித்தும், சந்தனம் மற்றும் குங்குமம் அடங்கிய பொட்டு வைத்தும் மலர் மற்றும் சாக்லெட் கொடுத்தும் வரவேற்றனர். இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது உற்சாகமடைந்தனர்.பெற்றோர்கள் ஆசிரியரின் வரவேற்புக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
கைக்கூப்பி வணக்கம்
மேலும் அரசு மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களை, ஆசிரியர்கள் பள்ளிவாயிலில் நின்றபடி கைகூப்பி வணக்கம் வைத்து, சாக்லெட் வழங்கி வரவேற்றனர். இன்னும் ஒரு சில தனியார் பள்ளிகளில், அழுதபடி வந்த 1-ம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர்கள் கட்டியணைத்து, தூக்கியப்படி பள்ளி வகுப்பறைக்கு கொண்டு சென்றனர்.
அதேபோல் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட குரும்பகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி பூவம் காமராஜ் அரசு உயர்நிலைப் பள்ளியில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், இலவச நோட்டுப் புத்தகம், சீருடை மற்றும் தையற்கூலி ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், வட்ட ஆய்வாளர் சவுந்தரராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள்
பள்ளி திறக்கப்பட்ட அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முதன்முறையாக இன்று சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களை பார்த்த மாணவர்கள், ஒன்றும் புரியாமல் பக்கங்களை புரட்டிபார்த்தனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி அருகில் உள்ள வீட்டு வாசல்கள் மற்றும் மரத்தடிகளில் அமர்ந்து மதியம் வகுப்பு முடியும் வரை காத்திருந்து, மாணவர்களுக்கு உணவு ஊட்டி சென்றனர்.