பள்ளி நிறுவனரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
|வில்லியனூர் அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகியை கைது செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகியை கைது செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் தொல்லை
வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் அப்பகுதியில் ஜெயபாலகோகுலம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி இரவு சிறப்பு வகுப்பின்போது பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பள்ளி நிறுவனர் குமரன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
வகுப்பு புறக்கணிப்பு
இதுகுறித்து அவர்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக பள்ளி நிறுவனர் குமரனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் இதுவரை பள்ளி நிறுவனரை போலீசார் கைது செய்யாமல் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று பள்ளி நிறுவனரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பள்ளியின் வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.