காப்பகத்தில் மாணவி மர்ம சாவு
|அரியாங்குப்பம் அருகே காப்பகத்தில் இருந்த மாணவி மர்மான முறையில் உயிரிழந்தார்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் சவுந்தர்யா (வயது 12) என்ற சிறுமி சுற்றித்திரிந்தாள். அவளை சமூக ஆர்வலர்கள் மீட்டு சிறார் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமியை தவளக்குப்பம் அருகே உள்ள கொருக்கமேடு கிராமத்தில் உள்ள கிருபாலயா குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
அங்கு சிறுமி தங்கியிருந்து தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு காப்பகத்திற்கு வந்த மாணவி சாப்பிட்டு விட்டு தூங்கினாள். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் சவுந்தர்யா எழுந்திருக்கவில்லை.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் பாதுகாவலரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது மாணவி சுயநினைவின்றி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டரை வரவழைத்து சோதனை செய்ததில் மாணவி இறந்திருப்பது தெரியவந்தது.
தவளக்குப்பம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.