< Back
புதுச்சேரி
புதுவை, காரைக்காலில் மழையுடன் கடல் சீற்றம்
புதுச்சேரி

புதுவை, காரைக்காலில் மழையுடன் கடல் சீற்றம்

தினத்தந்தி
|
9 Dec 2022 12:04 AM IST

புதுவை, காரைக்காலில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் மழையுடன் கடல் சீற்றமாக காணப்படுவதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை, காரைக்காலில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் மழையுடன் கடல் சீற்றமாக காணப்படுவதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை குழு வருகை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மழை சேதத்தை சமாளிக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். புதுவை, காரைக்காலில் தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புயல் மழையால் ஏற்படும் பாதிப்பை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைப்பதற்காக சமுதாயநலக் கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒருநாளைக்கு சுமார் 80 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி

புயல் காற்றின்போது சேதம் ஏற்படுவதை தடுக்க நகரில் பேனர், கட்-அவுட்டுகள் வைக்க தடை விதித்து அதிரடியாக உத்தரவிடப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதுடன் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து கட்டுமரம், விசைப்படகுகள் அனைத்தும் மேடான பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆபத்து காலங்களில் உதவும் வகையில் கட்டணமில்லா தொலைபேசியான 1070-1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய்திட்டு துறைமுகத்தில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்