< Back
புதுச்சேரி
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
புதுச்சேரி

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தினத்தந்தி
|
25 Jun 2023 9:01 PM IST

காரைக்கால் அம்மையார் கோவிலில் வருகிற ஜூலை 2-ந் தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் கோவிலில் வருகிற ஜூலை 2-ந் தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

காரைக்கால் அம்மையார்

சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். அதுமட்டுமின்றி 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் காரைக்கால் அம்மையார் மட்டுமே.

இத்தகைய பெருமைவாய்ந்த காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் உள்ளது. அவரது வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 30-ந்தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, காரைக்கால் அம்மையார்- பரமதத்த செட்டியார் திருக்கல்யாணமும் நடக்கிறது. 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதி உலாவும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தநிலையில், முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும், 4 நாட்களும், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். அது சமயம் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் கோவிலில் ஆய்வு செய்தார்.

பின்னர் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி, புருஷோத்தமன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக மருத்துவ முதலுதவிக்கான இடம், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்கள் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை உறுதி செய்தார்.

மேலும் செய்திகள்