< Back
புதுச்சேரி
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புதுச்சேரி

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 July 2023 11:25 PM IST

புதுவையில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

பாகூர்

ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடிப்பூர விழா

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில் தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

இந்தநிலையில் பாகூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரத்தில் பழமை வாய்ந்த பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி இன்று காலை பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து மாலையில் ஆண்டாளுக்கு திருக்கல்யாண சங்கல்பம் நடைபெற்றது. இந்த சங்கல்பத்தில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் உருவாகும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுமங்கலி பூஜை

செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் வளையல் அணிதல், சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் குங்கும பொட்டு வைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்