சமூக அமைப்புகள், கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
|மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுவையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.
புதுச்சேரி,
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுவையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.
கம்யூனிஸ்டுகள்
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுவை சாரம் அவ்வை திடலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் செயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சமூக அமைப்புகள்
இதேபோல் சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் களம் தலைவர் அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.