மோட்டார் சைக்கிள்களில் 6 கிலோ கஞ்சா கடத்தல்
|கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிள்களில் 6 கிலோ கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிள்களில் 6 கிலோ கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முள்ளோடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
5 பேர் கைது
பின்னர் அவர்களை கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற செல்வின் (வயது 49), கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த உத்தரமூர்த்தி (26), செல்லங்குப்பத்தை சேர்ந்த பிரவீன் (20), தனுஷ் (18), புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்த பிரகாஷ் (27) என்பதும், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட செல்வக்குமார் கஞ்சா விற்கும் கும்பலின் மூளையாக செயல்பட்டார். அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 60 கிலோ கடத்தியதாக கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.