'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் மேற்கொள்ள தொடரும் எதிர்ப்பு
|புதுவையில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் மோதலால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் மோதலால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம்
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் ரூ.30 கோடியிம் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்டமாக பஸ் நிலையத்தின் மைய பகுதியில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அமைப்பதற்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. சுமார் 3 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் இந்த கட்டிடம் அமைய உள்ளது.
கட்டிடம் கட்டும் பகுதியில் தடுப்புகளை அமைக்க காண்டிராக்ட் எடுத்தவர்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்கு பஸ் நிலைய பகுதியில் கடை வைத்துள்ளவர்களும், ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன.
போலீஸ் குவிப்பு
இந்த நிலையில் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை மீண்டும் தடுப்பு அமைக்கும் பணிக்கு தொழிலாளர்கள் வந்தனர்.
அவர்களை பணி செய்ய ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
கூடுதல் இடம்
இந்தநிலையில் உருளையன்பேட்டை போலீசார் ஆட்டோ டிரைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். காவல்நிலையத்தில் வைத்து நடந்த பேச்சுவார்த்தையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு ஆட்டோ சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பஸ் நிலைய பகுதியில் 18 ஆட்டோக்கள் நிறுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோ டிரைவர்கள் பஸ் நிலையத்தை சுற்றிலும் சுமார் 300 பேர் ஆட்டோ தொழிலில் ஈடுபடுவதாகவும், எனவே கூடுதலாக இடம் ஒதுக்கி தருவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதன்படி, கூடுதல் இடம் ஒதுக்க ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தள்ளுமுள்ளு
இதனிடையே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் பணி நடக்கும் அண்ணா திடலிலும் பிரச்சினை வெடித்தது. இங்கு முதல்கட்டமாக லப்போர்த் வீதி பகுதியில் கடைகள் கட்டும் பணியை முடித்து வியாபாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கு பணியில் ஊழியர்கள் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு குபேர் பஜாரில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் திரண்டு வந்தனர். அவர்கள் குபேர் பஜார் பகுதி கடைகளையும் உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்களிடம் வலியுறுத்தினார்கள்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவும் நடந்தது. அவர்களிடம் ஒதியஞ்சாலை போலீசாா் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினார்கள். பிரச்சினைகள் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசி முடிவு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இழுபறி நீடிப்பு
புதுவை நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதால் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாகவும் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.