2 வாரமாக காதலி பேசாததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை
|மூலக்குளத்தில் 2 வாரமாக காதலி பேசமறுத்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம்
2 வாரமாக காதலி பேசமறுத்ததால் டிப்ளமோ மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓராண்டாக காதல்
புதுவை பூமியான் பேட்டை பாவாணர் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன்-தையல்நாயகி தம்பதி. கடந்த 4 ஆண்டுக்கு முன்பு சரவணன் இறந்து விட்டார். இவர்களது மகன் ஆனந்த் (வயது 22). இவர், நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டி.எம்.எல்.டி டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தினமும் செல்போனில் உரையாடி வந்துள்ளனர்.
தற்கொலை
கடந்த 2 வாரமாக காதலர்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் ஆனந்த் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் வீட்டுக்கு வந்த ஆனந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 வாரமாக பேசாமல் இருந்த காதலி, தற்செயலாக காதலன் ஆனந்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நீண்ட ரிங் ஆனாலும் செல்போன் எடுக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த காதலி, தனது காதலனின் தாயார் தையல்நாயகிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, ஆனந்த் செல்போனை ஏன் எடுக்கவில்லை? என கேட்டுள்ளார். வேலைக்கு சென்றிருந்த தாயார் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வீட்டின் அறையில் மகன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----