தியேட்டரில் கடைகளை சூறையாடிவர் கைது
|புதுவை தியேட்டரில் கடைகளை சூறையாடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவை தியேட்டரில் கடைகளை சூறையாடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தியேட்டரில் தகராறு
புதுவை திருவள்ளுவர் சாலையில் சினிமா தியேட்டர் ஒன்று உள்ளது. அந்த தியேட்டருக்கு ரோடியர்பேட்டையை சேர்ந்த விஷ்வா (வயது 20) கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் பார்க்க சென்றார். அப்போது அவர், அங்குள்ள லிப்டின் கதவை சேதப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் விஷ்வா படம் சென்றுள்ளார். அப்போது விஷ்வாவிடம் அங்குள்ள ஊழியர் லிப்டின் கதவை சேதப்படுத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து விஷ்வா புறப்பட்டு சென்றுவிட்டார்.
கடை சூறை
பின்னர் சிறிது நேரம் கழித்து விஷ்வா தனது உறவினரும், ரவுடியுமான சதீஷ் (26) மற்றும் அவரின் கூட்டாளிகள் சிலருடன் தியேட்டருக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த விளம்பர பலகைகள், தியேட்டரில் இருந்த பாப்கான் கடை ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டு சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி சதீஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.