கட்டிடம் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீடுகள்
|புளியங்கொட்டை சாலையில் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீட்டு கட்டிடங்கள் உள்ளது.
காரைக்கால்
காரைக்காலில் புளியங்கொட்டை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் என அமைக்கப்பட்ட குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் 12 வீடுகள் உள்ளன.
மொத்தம் இங்குள்ள 72 வீடுகளில் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள் பள்ளமான பகுதியில் காணப்பட்டதால், பலரும் இங்கு குடிவரத் தயங்கினர்.
இடிய தொடங்கியது
ஒருவழியாக குடிசை மாற்று வாரியத்தில், வீடுகள் கோரியவர்கள் தயக்கத்துடன் இங்கு குடியேறினர். மேலும் இந்த குடியிருப்புகளை பராமரிக்க, குடியிருப்போரின் குறைகளுக்கு செவிமடுக்கவும் காரைக்காலில் பொறுப்புள்ள அதிகாரிகள் இல்லை. புதுச்சேரியிலிருந்து பல வருடங்களாக 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் காரைக்கால் குடிசைமாற்று வாரிய அலுவலகம் இயக்கப்பட்டு வருகிறது.
அதனால், பொதுமக்களின் கோரிக்கைகள், புகார்கள், ஆலோசனைகள் துறையின் உயர் மட்டத்துக்கு எட்டாமலேயே நீடித்தது. முறையாகப் பராமரிக்கப்படாத இந்த குடியிருப்புகள் தற்போது இடியத் தொடங்கி உள்ளன.
படிகள், கூரை, பக்கவாட்டு சுவர், கான்கிரீட் தூண்கள், முகப்பு அனைத்தும் இடிந்து கொண்டிருப்பதால் இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
அச்சத்துடன் குடியிருப்பு வாசிகள்
வீடுகள் ஒப்படைக்கப்பட்டது முதல், தற்போது வரை பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. சாப்பிடும்போது, உறங்கும்போது, படிக்கும்போது கான்கிரீட் பகுதிகள் இடிந்து பலர் காயமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். கான்கிரீட் பெயர்ந்து, உள்ளே இருக்கிற இரும்புக் கம்பியும் வெளியே நீட்டத் தொடங்கியுள்ளது.
இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, கடற்கரையை ஒட்டிய பகுதியில் கட்டப்பட்ட இக்குடியிருப்பில் வசிப்பது பெரும் சவாலாகவே நீடிக்கிறது.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்து அதன்பின் பரிகாரங்களை தேடுவதற்குள், வரும் முன் காக்க குடியிருப்போர் தரப்பிலிருந்து வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன.