ரூ.43 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
|காரைக்காலில் ரூ.43 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
காரைக்கால்
புதுச்சேரி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியக கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அறிவியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காரைக்கால், திருநள்ளாறு கோவில் நகரத்தில் அறிவியல் மையம், நவீன கோளரங்கம் மற்றும் புத்தாக்க மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை மாதிரியாக கொண்டு ரூ.17.26 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு ரூ.7.63 கோடியாகவும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.9.63 கோடியாகவும் இருக்கும்.
மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்டம் தருமபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புதுத்துறை (பறவைபேட்) பகுதியில் 11 எம்.எல்.டி. கொள்ளளவில் கழிவுநீர் சேகரிப்பு கிணறு, உந்து நிலையம் உள்பட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.43 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.