61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு புறப்பட்ட காரைக்கால் மீனவர்கள்
|மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து 61 நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
காரைக்கால்
மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து 61 நாட்களுக்கு பிறகு உற்சாகத்துடன் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
மீன்பிடி தடைகாலம்
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டும் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 400 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்த தடை காலத்தின்போது மீனவர்கள் தங்கள் படகு, வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை சீரமைத்து வந்தனர். பலர் புதிய விசைப்படகை தயார் செய்து வெள்ளோட்டம் விட்டனர். இன்னும் சிலர் ஏற்கனவே உள்ள படகுகளை, கரைக்கு கொண்டுவந்து பழுது பார்த்து, வண்ணம் பூசினர்.
கடலுக்கு புறப்பட்டனர்
இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதற்காக கடந்த 2 நாட்களாக தங்கள் படகுகளை இயக்கி சரி பார்த்து, வலை, நைலான் மற்றும் இரும்பினாலான இழுவை கயிறுகள், ஐஸ்கட்டிகள், டீசல் உள்ளிட்ட பொருட்களை படகில் ஏற்றிவந்தனர்.
பின்னர் இன்று அதிகாலை 3 மணி முதல் மீனவர்கள் உற்சாகத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். முன்னதாக காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு, மீனவர்கள் பூஜை செய்து, மாலை அணிவித்து, பூசணிக்காய் உடைத்து, கடல் மாதாவை வேண்டி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் திரும்பி வரும் போது வரத்து அதிகம் இருக்கும் என்பதால் மீன்களின் விலை குறையலாம் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.