கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
|புதுவையில் ‘லிப்ட்’ கொடுக்க மறுத்த கட்டிட தொழிலாளியை அரிவாள் வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் வீதியை சேர்ந்தவர் சோமு (வயது 44). கட்டிட தொழிலாளி. அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று சோமு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சாராயம் குடிக்க சென்றார்.
பின்னர் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது போகும் வழியில் வாலிபர் ஒருவர், சோமுவை வழிமறித்து 'லிப்ட்' கேட்டுள்ளார். ஆனால் சோமு அவரை ஏற்ற மறுத்து மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சோமுவை வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் அவரின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.