"நாட்டுக்காக போராடிய சாவர்க்கர் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார்" - தமிழிசை சவுந்தரராஜன்
|சாவர்க்கர் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து நாட்டுக்காக போராடியுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் நாடு முழுவதும் உள்ள 1,000 தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட உள்ளது.
இந்த சுவரில் பதிப்பதற்காக வீரமங்கை வேலுநாச்சியார், வீர சாவர்க்கர் ஆகியோரது பெயர் பலகைகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் உள்ள ஆச்சார்யா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-
"நாட்டுக்காக போராடிய சாவர்க்கர் 10 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். 1906-ம் ஆண்டு அவர் படிக்கப் போன இடத்திலேயே எல்லோருக்கும் தேசிய கனலை ஊட்டியிருக்கிறார். சுதந்திர போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள், சாவர்க்கரின் நினைவு கல்லை வைத்ததற்கு அநாவசியமாக பிரச்சினை செய்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் சாவர்க்கரின் நினைவு கல்லை பதித்ததில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். அரசியலாகினாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் ஆண்டாக இந்த 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடுகிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.