சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை
|சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி
சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
உலக சுற்றுலா தின விழாவை தொடங்கிவைத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மருத்துவ சுற்றுலா
நமது முதல்-அமைச்சர் பேசும்போது, கல்வி, மருத்துவ சுற்றுலா என்று குறிப்பிட்டார். மருத்துவ சுற்றுலாவில் நாம் முதலிடத்தில் இருக்கவேண்டும். ஏனெனில் இங்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.
முன்பு சிங்கப்பூர் சுற்றுலா செல்லும்போது பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த அளவுக்கு அங்கு விலை குறைவாகவும், தரமானதாகவும் பொருட்கள் இருக்கும். துபாயில் இரவு நேரத்தில்தான் கடைகள் அதிக அளவில் செயல்படும். அந்த நேரத்தில் மக்கள் பொருட்களை வாங்க செல்வார்கள்.
மாஸ்டர் பிளான்
புதுவையை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வசதியாக பஸ்களை இயக்கவேண்டும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழகத்திடம் இருந்து நிலம்பெற முயற்சி எடுத்து வருகிறோம். சுற்றுலா வளர்ச்சிக்கு ஹெலிகாப்டர் சேவை முக்கியம். இதனை அரசுக்கும், சுற்றுலாவுக்கும் பயன்படுத்தலாம். ஹெலிகாப்டரை அரசு வாங்குவது நல்லது.
சுற்றுலா துறையானது அதிக பொருளாதாரத்தை ஈட்டித்தரும். டூரிசம் (சுற்றுலா) அதிகமானால் டெரரிசம் (தீவிரவாதம்) குறையும் என்று பிரதமர் கூறியுள்ளார். புதுவையில் பாரதியாருக்கு வானுயற சிலை அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளேன்.
கொரோனா பாதிப்புக்குபின் இந்தியாவுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. சுற்றுலா வளர்ச்சி ஏற்படவும், போக்குவரத்து நெரிசலை போக்கிடவும் மாஸ்டர் பிளான் போட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
நல்ல வாழ்க்கை முறை
நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் தமிழக பாடத்திட்டத்தில் சனாதனம் குறித்த குறிப்புகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளனரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
முதலில் சனாதனம் ஒழிக்கப்படும் என்றனர். இப்போது நீக்கப்படும் என்கின்றனர். முதலில் சனாதனம் என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாக சொல்லட்டும். சனாதனத்தை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கட்டும். சனாதனம் என்றாலே தவறு என்று முன்னிறுத்துகின்றனர்.
சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை. பிடிக்கவில்லை என்பதற்காக சனாதானம் கேட்கக்கூடாத வார்த்தை என்பதுபோல் கொண்டு செல்வது தவறு.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.