உப்பு லாரியில் டிரைவர் மர்ம சாவு
|சாலையோரம் நின்ற உப்பு லாரியிலிருந்த அதன் டிரைவர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோட்டுச்சேரி
சாலையோரம் நின்ற உப்பு லாரியிலிருந்த அதன் டிரைவர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உப்பு லாரி
கோட்டுச்சேரியில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் தூத்துக்குடியில் இருந்து ஒரு கம்பெனியின் லாரிகள் உப்பு லோடு ஏற்றி வந்து இறக்கிச் செல்வது வழக்கம். 2 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் இருந்து ஒரே கம்பெனியைச் சேர்ந்த 9 லாரிகள் உப்பு லோடுடன் புதுச்சேரிக்கு புறப்பட்டன.
தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது34), சாத்தூர் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாடசாமி (52) உள்ளிட்ட சிலர் லாரிகளை ஓட்டி வந்துள்ளனர். புதுச்சேரியில் உப்பு லோடை இறக்கிய டிரைவர் காளிராஜ், ஊர் திரும்பும் வழியில் கோட்டுச்சேரி சிங்காரவேலு திருமண மண்டபம் அருகே தனது கம்பெனி லாரி ஒன்று உப்பு லோடுடன் தனியே நிற்பதை பார்த்துள்ளார்.
லாரியில் பிணம்
லாரியை பார்த்ததும் நிறுத்திய காளிராஜ், சாலையோரம் நின்ற லாரியில் ஏறி பார்த்தார். அங்கு லாரியில் படுத்த நிலையில் டிரைவர் மாடசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிந்தது.
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாடசாமியின் உடலைக் கைப்பற்றி, அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.