< Back
புதுச்சேரி
9 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி

9 ஆண்டுகளில் மீனவர்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
29 Jun 2023 11:55 PM IST

புதுவையில் மீனவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதுச்சேரி

மீனவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.

மீன் ஏற்றுமதியில் முதலிடம்

விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

இந்தியா முழுவதும் 2.8 கோடி மீனவர்கள் உள்ளனர். மீனவர்கள் உழைப்பால் உலகத்தில் மீன் ஏற்றுமதியில் 3-வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதலிடத்திலும் நாம் உள்ளோம். மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபின் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தது. மேலும் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் ரூ.38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2023 வரை 121 லட்சம் டன்னாக, மீன் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிக்க ஆண்டிற்கு 5 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள படகை வெறும் 10 சதவீதம் செலுத்தி (மத்திய அரசு 60 சதவீதம் மானியம், 30 சதவீதம் வங்கி கடன்) பெற முடியும். மீனவர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

திட்டத்தை மேம்படுத்தும் முயற்சி

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் மீனவ மக்களுக்கு அனைத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசின் நிவாரண தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மீனவ மக்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாத்து வருகிறது. புதுச்சேரி துறைமுகம் பழைய பாலம் சாகர்மாலா திட்டத்தின் மூலம் புனரமைத்து சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு மாற்று திட்டம் தயாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு நீலப் புரட்சிக்காக கையெழுத்திட்டு இருக்கிறது. மீனவர்கள் வருங்கால சந்ததியினர் மீன்பிடி துறையில் பல சாதனைகளை செய்ய வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். மக்கள் நலம் சார்ந்த அத்தனை திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடல் அரிப்பு

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் சுனாமிக்கு பின் மீனவர்களின் நிலை உயர்ந்துள்ளது. மீனவர் மக்கள் கேட்டும் அனைத்து திட்டகளையும் அரசு நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு நாம் கேட்டும் நிதியை விட கூடுதலாக வழங்கி வருகிறது. பனித்திட்டு, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மீனவர்களின் வாழ்வை வளப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அனிபால் கென்னடி, பாஸ்கர், தட்சணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், புதுவை தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் 428 மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை, 3 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 862 மதிப்பில் குளிரூட்டப்பட்ட கனரக வாகனம், 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் உள்பட மொத்தம் ரூ.11 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

மேலும் செய்திகள்