< Back
புதுச்சேரி
ரூ.12 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்
புதுச்சேரி

ரூ.12 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்

தினத்தந்தி
|
22 Jun 2023 10:34 PM IST

வைத்திக்குப்பம் பகுதியில் ரூ.12 கோடி செலவில் நிறைவுபெற்ற குடிநீர் திட்ட பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

முத்தியால்பேட்டை

வைத்திக்குப்பம் பகுதியில் ரூ.12 கோடி செலவில் நிறைவுபெற்ற குடிநீர் திட்ட பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

குடிநீர் திட்ட பணிகள்

புதுவை வைத்திக்குப்பம் பகுதி மக்களுக்கு காட்டாமணிக்குப்பத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அந்த பகுதியில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதன்படி வைத்திக்குப்பத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, நீர் உந்து குழாய்கள், நீர் வினியோக குழாய்கள், மோட்டார் பம்புசெட்டு ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு

இதைத்தொடர்ந்து இந்த குடிநீர் தொட்டி சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் முருகானந்தம், பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் சுப்பாராவ், இளநிலை பொறியாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் அதாவது பட்டேல் சாலைக்கு வடக்கு, ஏழை மாரியம்மன் கோவிலுக்கு தெற்கு, காந்தி வீதிக்கு கிழக்கு, கடற்கரை சாலைக்கு மேற்கு பகுதி மக்கள் பயனடைவார்கள்.


மேலும் செய்திகள்