ஏனாமில் ஆசிரியை வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
|ஏனாமில் ஆசிரியை வீட்டில் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஏனாம்
ஏனாம் பிராந்தியம் ராம்நகரை சேர்ந்தவர் லோவ ராஜூ (வயது 50). இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி சிவகுமாரி வசித்து வருகிறார். இவர் ஆந்திராவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது தசரா விடுமுறை என்பதால் சிவகுமாரி ஐதராபாத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது கணவன் சூரியநாராயணாவும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அந்த வீட்டை லோவராஜூவை பார்த்துக்கொள்ளும்படி அவர்கள் கூறி சென்றுள்ளனர்.
நகைகள் திருட்டு
இந்தநிலையில் பூட்டிகிடந்த வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லோவா ராஜூ வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரி உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பெருட்கள் திருட்டு போயிருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள், கதவின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக லோவராஜூ ஏனாம் போலீசில் புகார் செய்தார்.
வலைவீச்சு
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.