நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்
|காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால்
காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிதி நிறுவனம்
காரைக்கால் நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மேலாளர் மணிமொழி. அதே நிறுவனத்தில், காரைக்காலை அடுத்த பூவம் அய்யனார் கோவில் தெருவைச்சேர்ந்த சுதாகர் (வயது28) என்பவர், தனிநபர் கடன் பிரிவில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஆகஸ்டு மாதம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம், மாதாந்திர தவணைத்தொகை ரூ.80,242 வசூல் செய்து, அதனை நிறுவனத்தில் கட்டாமலும், அலுவலகத்திற்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இது குறித்து சுதாகர் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரிடம் கேட்டபோது, சுதாகர் பற்றி எங்களுக்கு தெரியாது என கூறியதாக தெரிகிறது.
ரூ.4 லட்சம் கையாடல்
தொடர்ந்து கடன்பெற்ற நபர்களிடம், தனிநபர் கடன் வசூல் குறித்து விசாரித்தபோது, அலுவலக லெட்டர் பேர்டைபோல், போலியாக லெட்டர் பேர்டை சுதாகர் தயாரித்து, சில ஆசைவார்த்தைகள் கூறி, அதில், ஒரே தவணையில் கடன் தொகையினை செலுத்தியதாக கையெழுத்திட்டு, மகேஸ்வரன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம், இஸ்மத்நாச்சியார் என்பவரிடம் ரூ40 ஆயிரம், விக்னேஸ்வரன் என்பவரிடம் ரூ36 ஆயிரம், ஷீலா என்பவரிடம் ரூ.1 லட்சம், மணிமேகலை என்பவரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் வசூல் செய்த மாதாந்திரதொகை ரூ.80,424 சேர்த்து ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டது கூறப்படுகிறது.
வலைவீச்சு
இது குறித்து நிதி நிறுவனம் சார்பில் மணிமொழி என்பவர் காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுதாகரை தேடிவருகின்றனர்.