காரில் கடத்திய ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
|பாகூர் அருகே காரில் கடத்திய ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகூர்
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) மற்றும் போலீசார் புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
போலீசாரை பார்த்ததும் டிரைவர், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிறிது தூரம் விரட்டிச்சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரை சோதனை செய்தபோது, சாக்கு மூட்டைகளில் 80 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
இது தொடர்பாக காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கடலூர் மாவட்டம் குட்டியாங்குப்பத்தை சேர்ந்த மதியழகன் (வயது 35), நெல்லிக்குப்பம் அப்துல் ரஹீத் (45), பெரிய கங்கனாங்குப்பம் சரவணன் (36) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.