< Back
புதுச்சேரி
கரடு, முரடாக காட்சியளிக்கும் சாலைகள்
புதுச்சேரி

கரடு, முரடாக காட்சியளிக்கும் சாலைகள்

தினத்தந்தி
|
6 July 2023 10:18 PM IST

புதுவையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்பட்டதால் நைனார் மண்டபம் பகுதியில் சாலைகள் கரடு, முரடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி

குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்பட்டதால் நைனார் மண்டபம் பகுதியில் சாலைகள் கரடு, முரடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

குடிநீர் குழாய்

புதுவை நைனார்மண்டபம், வேல்ராம்பட்டு பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

பள்ளங்கள் தோண்டிய உடனேயே குழாய்கள் பதிக்கப்பட்டு உடனடியாக பள்ளங்கள் மூடப்படுகிறது. இந்த பள்ளங்கள் சரிவர மூடப்படுவதில்லை. இதனால் சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் சரிவர மண் கொட்டப்படாமல் பள்ளமாகவும் உள்ளது. 20 அடி அகலமே உடைய ரோட்டில் பெரும்பாலும் மையப்பகுதிக்கு அருகிலேயே பள்ளங்கள் தோண்டப்படுகிறது. இவை சரிவர மூடப்படாததால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

ரோட்டில் எதிரே ஏதாவது ஒரு வாகனம் வந்தால் இந்த மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன.

மண் உள்வாங்கியது

தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் பல இடங்களில் பள்ளத்தை மூட கொட்டப்பட்ட மண் உள்வாங்கி குழிபோல் காணப்படுகிறது. அதில் வாகனங்களும் சிக்கி கொள்கின்றன.

வேல்ராம்பட்டு பகுதியில் சாலைகள் ஏற்கனவே மிகவும் மோசமாக உள்ள நிலையில் தற்போது குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் சரிவர மூடப்படாததால் கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்