ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி சாலை மறியல்
|காரைக்கால்- பேரளம் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அம்பகரத்தூர்
காரைக்கால்- பேரளம் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அகல ரெயில்பாதை
காரைக்கால் முதல் பேரளம் வரை இயங்கி வந்த ரெயில் போக்குவரத்து சேவை, கடந்த 35 ஆண்டுகளுக்குமுன் நிறுத்தப்பட்டது. ஆனால் காரைக்கால்- நாகூர் இடையே அகல ரெயில் பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது காரைக்கால்-பேரளம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் ரெயில் நிலையம் அருகே, தமிழகத்தின் திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகள் சில தூரம் உள்ளது. காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் இருந்து தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை இணைக்கும் ஜவகர் சாலையில் (பழைய ரெயிலடி சாலை) ரெயில் பாதையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
சாலைமறியல்
அப்பகுதியில் சுரங்க பாதை அமைத்தால் திருவாரூர் மாவட்ட பகுதிகளான உபயவேதாந்தபுரம், மேனாங்குடி, செம்பியநல்லூர், ரெட்டக்குடி உள்ளிட்ட 6 பஞ்சாயத்துக்களில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள் என்பதால், அப்பகுதியில் சுரங்கப்பாதை மிக அவசியம் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெறுவதாக தெரியவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அம்பகரத்தூர் அடுத்த ஜவகர் சாலை அருகே கிராம மக்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால்-அம்பகரத்தூர் சாலையில் திருவாரூர் எல்லை பகுதியில் இன்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கு வந்த பேரளம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் பேச்சுவார்த்தை நடத்தி, சுரங்கப்பாதை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகத்தை முறைப்படி வலியுறுத்துவோம் என்றார். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், காரைக்கால்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.