< Back
புதுச்சேரி
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளிப்பு
புதுச்சேரி

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளிப்பு

தினத்தந்தி
|
28 Sept 2023 11:04 PM IST

புதுவையில் 3 ஆண்டுகளாக பணபலன் கிடைக்காததால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

புதுச்சேரி

3 ஆண்டுகளாக பணபலன் கிடைக்காததால் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

புதுச்சேரி வெங்கட்டாநகர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சோபித குமார் (வயது 62). அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

வழக்கமாக அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் சில மாதங்களில் பணிக்கொடை வழங்கப்படும். ஆனால் சோபிதகுமார் பணியாற்றிய காலத்தில், கடன் சங்கத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தணிக்கை நடைபெற்று வருவதால் இவரது பணிக்கொடை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனரும், கான்பேட் நிறுவனத்தின் இயக்குனருமான அய்யப்பன் என்பவரை அடிக்கடி சந்தித்து பணபலன்கள் வழங்குமாறு வலியுறுத்தி வந்தார்.

முறையிட்டார்

இந்தநிலையில் இன்றும் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பாப்ஸ்கோ அலுவலகத்திற்கு எதிரே உள்ள கான்பேட் மேலாண் இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று இயக்குனரை சந்தித்து சோபிதகுமார் முறையிட்டுள்ளார். அப்போது வரவு-செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பின்னர் தான் பணிக்கொடை வழங்க முடியும், இன்னும் ஒரு வாரத்தில் பணிக்கொடை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தற்போது வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி, சென்று விட்டார்.

தீக்குளித்தார்

3 ஆண்டுகளாகியும் பணிக்கொடை கிடைக்காத விரத்தியில் இருந்த சோபித குமார், கான்பேட் அலுவலகம் முன் தான் இருசக்கர வாகனத்துக்காக பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபடி அங்கும் இங்குமாக ஓடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள், சோபிதகுமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விசாரணை

இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் கலைச்செல்வி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் பணிக்கொடை கிடைக்காத விரக்தியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்