< Back
புதுச்சேரி
திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு
புதுச்சேரி

திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்கள் காரைக்கால் வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2023 10:36 PM IST

திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்களை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால்

திருச்சி-ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில்களை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோரிடம் வலியுறுத்தப்பட்டது.

ரெயில் திட்ட பணிகள் ஆய்வு

தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், நேற்று முன்தினம் காரைக்கால்-பேரளம் ரெயில் திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் இரவு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டார்.

அப்போது அவரிடம், காரைக்கால் மாவட்ட ரெயில்வே பயணிகள் நலவாரிய சங்க தலைவர் யாசீன், துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அன்சாரி பாபு மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அப்போது நாஜிம் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காரைக்கால்-பேரளம் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு உள்ளிட்ட ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் மயிலாடுதுறை, பேரளம், அம்பகரத்தூர், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு டெமோ, மெமோ ரெயில்களை இயக்க வேண்டும்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

காரைக்கால்-மதுரை இடையே ரெயில் சேவை தொடங்க வேண்டும். அதேபோல் பகல் நேரத்தில் தாம்பரம்-வேளாங்கண்ணி இடையே திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். காரைக்கால் அல்லது திருநள்ளாரில் நீண்டதூர ரெயில்களை பராமரிக்க பிட் லைன் வசதியும் அமைக்க வேண்டும்.

திருச்சி- ஈரோடு, மதுரை-புனலூர் ரெயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். கோவைக்கு பழனி, பொள்ளாச்சி வழியாக விரைவு ரெயிலை இயக்க வேண்டும். காரைக்கால்-தஞ்சை ரெயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். இதன்மூலம் தங்குதடையின்றி ரெயில் பயணிகளும், துறைமுக சரக்குகளை கையாள பெரிதும் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்