அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
|கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
புதுச்சேரி
எக்ஸ்ரே கருவி
புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் 3 எக்ஸ்ரே கருவிகள் உள்ளன.
இதில் ஒரு எக்ஸ்ரே கருவி கடந்த சில மாதங்களுக்கு முன்பே பழுதாகிவிட்டது அதனை பயன்படுத்த முடியாது என்பதால் புதிதாக எக்ஸ்ரே கருவி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2 கருவிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், நேற்று அதில் ஒன்று பழுதானது. இதனால் ஒரே ஒரு கருவி மூலம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளிகள் அவதி
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருவதால் பலரை வெளியில் சென்று எக்ஸ்ரே எடுத்து வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரிக்கு பெரும்பாலும் ஏழைகளே வருவதால் போதிய பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக 100-க்கும் மேற்பட்டவர்கள் இதேபோல வெளியே தனியாரிடம் சென்று எக்ஸ்ரே எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்று சிறிய கருவி பழுது போன்ற செயல்பாடுகள் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
அதிகாரி விளக்கம்
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் ராஜேஷிடம் கேட்டபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 3 எக்ஸ்ரே கருவிகளில் ஒன்று ஏற்கனவே பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதாகிவிட்டது. அதற்கு பதிலாக புதிய எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டுள்ளது. அது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தற்போது ஒரு கருவியை வைத்து சமாளித்து வருகிறோம். மற்றொரு கருவி விரைவில் பழுது பார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.