ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் சீரமைப்பு
|புதுச்சேரி ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி
புதுச்சேரி ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. முதல்- அமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
ரூ.93 கோடியில் சீரமைப்பு
நாடு முழுவதும் உள்ள 508 ரெயில் நிலையங்கள் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரூ.26 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரி ரெயில் நிலையமும் ஒன்றாகும். இதனை புதுப்பிக்க ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு, ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில், முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
மிகுந்த அக்கறை
நாடு முழுவதும் உள்ள 508 ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுவது நல்ல நோக்கமாகும். ஏனென்றால் ரெயில்களை, ரெயில் நிலையங்களை பயன்படுத்துவது பெரும்பாலும் ஏழை-எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தான். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் ரெயில் நிலையங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றப்படும்.
ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். புதுவையில் முன்பு தினமும் 2 ரெயில்கள் மட்டுமே வந்து செல்லும். ஆனால் இன்று ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். நாடு வல்லரசாக மாற வேண்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் மேம்படுத்தும்போது யூனியன் பிரதேசமான புதுச்சேரி ரெயில் நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தின் மீது மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. நவீனப்படுத்தும் போது பழமை மாறாமல், அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடைமேடை
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.குப்தா, தலைமை பொறியாளர் ஹிமேன்சு கவுசி, திருச்சி ரெயில்வே மேலாளர் அன்பழகன், புதுச்சேரி நிலைய கண்காணிப்பாளர் தமிழரசு மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி ரெயில் நிலையம் மேம்படுத்தப்படும்போது அங்கு ரெயில் நிலைய கட்டிடம், தங்கும் விடுதி தரம் உயர்த்தப்படும். நடைமேடை, மேற்கூரை, 20 பேர் செல்லக்கூடிய லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு), பயணிகள் தங்கும் அறை, உணவு விடுதிகள், ஏ.சி. வசதியுடன் கூடிய அறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.