பேனர், கட்-அவுட்களை அகற்ற கெடு
|அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், கட்-அவுட்களை இன்றைக்குள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், கட்-அவுட்களை இன்றைக்குள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய், அஜித் பட பேனர்
புதுச்சேரியில் கட்-அவுட், பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்களை வரவேற்று அவரது ரசிகர்கள் புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில் அனுமதியின்றி கட்-அவுட், பேனர்களை வைத்துள்ளனர். இவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலையோர ஆக்கிரமிப்புகள்
புதுச்சேரியில் அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள், கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் தற்காலிக, நிரந்தர கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அனுமதியின்றி பொதுஇடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்களை அகற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.
உரிமம் ரத்து செய்யப்படும்
பேனர்கள், கட்-அவுட், கொடிகளை அகற்றுவதற்கு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரி முழுவதும் உள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விதிகளை மீறும் பேனர் அச்சிடுவோர், தயாரிப்பாளர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து அனுமதியின்றி பொது இடங்களில் உள்ள பேனர், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் அகற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.