கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்வு
|புதுவை கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
உலக சுற்றுலா தினம்
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலியார்பேட்டை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடந்த சுற்றுலா தின விழாவினை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
கல்வி-ஆன்மிக சுற்றுலா
புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியமானது ஆகும். சுற்றுலா அதிக வருமானத்தை தருகிறது. அதனால் பொருளாதாரம் வளர்ச்சி பெறுகிறது. நமது கலாசாரமும் வெளியில் தெரிகிறது. புதுவையில் இன்று வரை பிரெஞ்சு-இந்திய கலாசாரம் உள்ளது. அதை அறிந்துகொள்ள சுற்றுலா பயணிகள் பிரெஞ்சு கட்டிடங்களை பார்வையிடுகின்றனர்.
புதுச்சேரி ஆன்மிக பூமி, இங்கு கல்வி சுற்றுலா, மருத்துவ சுற்றுலாவும் உள்ளது. இது அமைதி பூமி. சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டுவதுதான் அதற்கு முக்கிய காரணம். விடுமுறை நாட்களில் நள்ளிரவு 2 மணிக்குக்கூட சுற்றுலா பயணிகள் சர்வ சாதாரணமாக இங்கு நடமாடுகின்றனர்.
பாரம்பரிய கட்டிடங்கள்
சுற்றுலா பயணிகளின் வருகை தொடர புதுவை சுத்தமான இடமாக இருக்கவேண்டும். நகரப்பகுதி மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தி வருகிறோம். திருக்காஞ்சி கோவில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக்கப்பட்டுள்ளது. அங்கு உயரமான சிவன் சிலையும் அமைக்கப்பட உள்ளது. வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலிலும் பணிகள் நடந்துள்ளன.
சுற்றுலாவுக்கு அடிப்படையே ஓட்டல்கள்தான். கடற்கரை அருகே ஓட்டல்கள் கட்ட அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்கு விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கும் நிறைய பேர் வருகிறார்கள்.
சுற்றுலா வளர்ச்சியில் சுற்றுலா, பொதுப்பணித்துறை இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நமது வளர்ச்சி இருக்கவேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்
அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-
புதுவையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.138 கோடிக்கு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அடுத்ததாக சுதேசி தர்ஷன் 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதன்படி ரூ.100 கோடிக்கு திட்டங்கள் கிடைக்கும். புதுவையில் தனியார் பங்களிப்புடன் கூடிய சுற்றுலா திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். புதுவையில் உள்ள 17 கல்லூரிகளில் சுற்றுலா தூதர் திட்டத்தையும் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.
சம்பத் எம்.எல்.ஏ.
விழாவில் சம்பத் எம்.எல்.ஏ. பேசும்போது, வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளை இணைத்து சுற்றுலா திட்டங்களை தொடங்கவேண்டும், படகுத்துறை அமைக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை செயலாளர் மணிகண்டன், இயக்குனர் முரளிதரன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.