டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு துறைமுகத்தை உறவினர்கள் முற்றுகை
|காரைக்கால் அருகே டிப்பர் லாரி மோதி பலியான டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு தனியார் துறைமுகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திரு-பட்டினம்
டிப்பர் லாரி மோதி பலியான டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு தனியார் துறைமுகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
லாரி டிரைவர் பலி
காரைக்காலை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில், திருவாரூர் மாவட்டம் ஆமுர் பகுதியைச் சேர்ந்த ஜான்செல்வம் (வயது 28) லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி அவர் ஓட்டி வந்தார்.
கடந்த 16-ந் தேதி துறைமுகத்தின் உள்ளே கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட நிலக்கரியை, துறைமுகத்தின் வேறு ஒரு பகுதிக்கு லாரி மூலம் ஏற்றிச் செல்லும்போது, எதிரில் வந்த மற்றொரு டிப்பர் லாரி மீது மோதியது. இதில் ஜான்செல்வம் படுகாயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, ஜான்செல்வத்தை சக ஊழியர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இழப்பீடு கேட்டு முற்றுகை
இந்த நிலையில் விபத்தில் பலியான டிரைவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு அவரது உறவினர்கள், சக தொழிலாளர்கள் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலக்கரி ஏற்றி வந்த லாரிகளையும் சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்ததும் திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துறைமுக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.