திருபுவனையில் மீண்டும் செயல்பட தொடங்கிய வட்டார போக்குவரத்து அலுவலகம்
|திருபுவனையில் வட்டார போக்குவரத்து அலுவலக இடமாற்றத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அதே இடத்தில் செயல்பட தொடங்கியது.
திருபுவனை
வில்லியனூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் திருபுவனையில் இயங்கி வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அலுவலகத்தில் வில்லியனூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை புதுப்பித்தல், பெயர் மாற்றம், ஓட்டுநர் உரிமம் பெற மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்தநிலையில் போதிய இடவசதி இல்லாததால் இந்த அலுவலகத்தை புதுச்சேரி சாரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக திருபுவனை அலுவலகத்தில் இருந்த பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல முயன்றபோது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் லாரியில் ஏற்றிய பொருட்களை கீழே இறக்கி அலுவலகத்துக்குள் பூட்டி வைத்தனர். இதனால் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல் இருந்து வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்போது மீண்டும் திருபுவனையில் செயல்பட தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.