< Back
புதுச்சேரி
வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம்
புதுச்சேரி

வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
8 July 2023 10:07 PM IST

காரைக்காலில் பெண் ஊழியர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காரைக்கால்

பெண் ஊழியர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஊழியர்களிடம் அத்துமீறல்

காரைக்கால் நேருநகர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் வட்டார வளாச்சி அலுவலக இணைப்பு அதிகாரி மகேஷ்குமார் (வயது 36) தனக்கு கீழ் பணிசெய்யும் பெண் ஊழியர்களை தனது வீட்டு வேலைகளை பார்க்கச்சொல்வது, அவர்களிடம் அத்துமீறி நடப்பது, ஆபாசமாக பேசுவது, கை, கால்களை அமுக்கி விட சொல்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மயங்கி விழுந்த பெண்

முடியாது என மறுக்கும் பெண்கள் குறித்து மேல் அதிகாரியிடம் தவறான புகார்களை அளித்து, வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டுவதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு பெண் ஊழியரை வேலையைவிட்டு நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 வயது பெண் ஊழியரை சொந்த வேலை செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் மறுத்ததால் கடுமையாக திட்டியதுடன் வேலையை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து சக பெண் ஊழியர்கள் காரைக்கால் மகளிர் காவல்நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் புகார் கூறப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி மாநில ஊரக வளர்ச்சித்துறை திட்ட அதிகாரி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்