< Back
புதுச்சேரி
செல்லிப்பட்டு படுகை அணை கட்ட ரூ.20 கோடியில் மீண்டும் டெண்டர்
புதுச்சேரி

செல்லிப்பட்டு படுகை அணை கட்ட ரூ.20 கோடியில் மீண்டும் டெண்டர்

தினத்தந்தி
|
20 Oct 2023 10:06 PM IST

செல்லிப்பட்டு படுகை அணையை கட்ட மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் பகுதியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1906-ம் ஆண்டு கட்டப்பட்ட படுகை அணை கடந்த 2021-ம் ஆண்டு உடைந்தது. இந்த அணையை கட்ட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதற்காக கடந்த ஜனவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினத்தந்தியிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த படுகை ஆணையை கட்டக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் படுகை அணை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.

ரூ.19.85 கோடி டெண்டர்

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலமாக பாகூர் உபரிநீர் வாய்க்காலின் மேல் பாலம் கட்டுதல் மற்றும் பாகூர் ஏரிக்கரையோரம் புதிதாக சாலை அமைத்தல் பணிக்காக ரூ.7 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலும், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் சங்காரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ரூ.19 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலும், பாகூர் கொம்மந்தான்மேடு பெண்ணையாற்றின் இருகரைகளையும் பலப்படுத்தி தற்காலிக பாதுகாப்பு கட்டைகள் மற்றும் இரு கரையோரமும் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டிலும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் மத்தியில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதால் விருப்பம் உள்ள அரசு பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க www.pudutenders.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு அதற்கான விதிமுறைகளையும், விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பணிகள் தொடக்கம்

அடுத்த மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்து டிசம்பர் மாதத்திலேயே பணிகளை தொடங்க ஏதுவான நடவடிக்கைளை பொதுப்பணித்துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்