ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு
|காரைக்காலில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு நடத்தி பணிக்கு வராதவர்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
காரைக்கால்
ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு நடத்தி பணிக்கு வராதவர்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
குப்பைகள்
காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பணியில் இருக்கும் டாக்டர்கள், நோயாளிகளிடம் ஏதேனும் குறைகள் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.
மேலும் அனைத்து இடங்களையும் பார்வையிட்ட கலெக்டர், ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்டு, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, 100 நாள் வேலை திட்டத்தில் இப்பணியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.
கால்நடை ஆஸ்பத்திரி, பஞ்சாயத்து
மேலும் ஆஸ்பத்திரியை சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தவேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கால்நடை ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனை கால்நடைகள் வருகின்றன?. கோட்டுச்சேரி கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வளவு கால்நடைகள் இருக்கின்றன? என்றும், கால்நடைகளுக்கு என்னென்ன தடுப்பூசி போடுகிறீர்கள்? என்றும் கேட்டறிந்தார்.
விளக்கம் அளிக்க உத்தரவு
அதேபோல், நாய்களுக்கு என்னென்ன தடுப்பூசி போடுகிறீர்கள் என்று கேட்ட கலெக்டர், அதற்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டு வருவதை உறுதி செய்தார். மேலும் மருந்துகள் இருப்பு வைக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அவர் குளிர் சாதன பெட்டிகள் முறையாக இயங்குகிறதா? என்பதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், பணிக்கு குறித்த நேரத்தில் வராதவர்களை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது டாக்டர் கிருத்திகா, ஆணையர் சிவநேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாசன வாய்க்கால் மூடல்
இந்தநிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலைகள் அமைக்கும் பணிக்காக காரைக்கால் பிள்ளை தெருவாசல் பகுதியில், பாசன வாய்க்காலை மூடி சாலை போடப்பட்டது குறித்து கலெக்டர் குலோத்துங்கனுடன் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். உடனே கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று, வாய்க்காலை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொருட்கள் கொண்டு செல்வதற்காக வாய்க்கால் மீது தற்காலிகமாக சாலை போட்டுள்ளோம். சாலை பணி முடிந்ததும், இந்த இடத்தில் பாலம் கட்டப்படும் என்றனர். அதற்கு மாவட்ட கலெக்டர், மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்க இருப்பதால், வருகிற 10-ந் தேதிக்குள் பாலம் கட்டும் பணியை கட்டி முடிக்கவேண்டும், இ்ல்லையென்றால் தண்ணீர் செல்வதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.